Tuesday 21 August 2012

வெளி நாட்டு வாழ்க்கை....



வெளி நாட்டு வாழ்க்கை....

தெரியாத ஊர்...
அறியாதமொழி...
புதிதான சூழல்...
புரியாத சுற்றம்...
அனைத்தும் தாண்டி நாம்
அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே...

முதலில்
வெளிநாட்டில் வாழ்வோரெல்லாம்
தகுதியானவர்கள் இல்லை
பிறர்க்கு வாழ்க்கையை கற்றுகொடுக்கவும்
தகுதியானவர்கள்...

இங்கே
முடிந்தால் சாப்பிடுவோமே தவிர
மூன்றுவேளையும் சாப்பிடுவது இல்லை...
முடிவெட்டினால் கூட
ஒட்ட வெட்டுவோமே தவிர
ஒருபோதும் விட்டு வெட்டியதில்லை...

இது
எங்களின் கஞ்சதனமில்லை
நான் அசிங்கமானாலும் பரவாயில்லை
என் குடும்பம் அழகாக இருக்கவேண்டுமென்ற
அபூர்வ குணமே....

பக்கத்து தெருவில்
பட்டிமன்றம் நடந்தாலும்
தெருமுனையில்
தேவாரமும்,திருவாசகமுமே
சொன்னாலும்
காது கொடுத்து கேட்க்காத நான் –இங்கு
காசு கொடுத்து காத்திருக்கிறேன்-என்றால்
வெளிநாட்டு வாழ்க்கை -என்
தமிழ் உணர்வை தட்டி
எழுப்பி இருக்கிறது என்றுதானே
அர்த்தம்...

எங்களின்
ஒழுத குடிசைகள் ஓடானது
கிழிந்த உடைகள் சீரானது
அடகுகடை ரசீதுகளை
அடகுவைத்த பொருட்களை விட
ஒத்தி  வைத்தது கொஞ்சம்
குறைந்து போனது...

அப்துல்கலாம்
கனவு காணச்சொல்லி
வெற்றிபெற்றோர் உள்நட்டில்
எத்தனை பேரோ எனக்கு தெரியாது
வெளிநாட்டில் உள்ள அத்தனை பேரும் என்று
அனைவருக்கும் தெரியும்...

இங்கே
சைவம் அசைவம் கிடையாது
அய்யர் என்னோடு ஆட்டுக்கறி சாப்பிடுகிறார்
இங்கே
சாதி மதங்கள் தடுக்காது
முருகன் முகமதுவை மச்சான் என கூப்பிடுகிறான்

இங்கே
கலவரங்கள் கிடையாது
கர்நாடககாரர் கூட பாணி சையே என்கிறார்

இங்கே
பயங்கரவாதமும் கிடையாது
பாகிஸ்தான்காரர் என்
பக்கத்து அறையில் தான் உள்ளார்
இதன் மூலம் நாங்கள்
உள்ளூர் ஒற்றுமையை மட்டுமல்ல
உலக ஒற்றுமையையும் காக்கிறோம்- என்று
உரக்கச் சொல்லிக்கொள்கிறோம்...

வீட்டில் விஷேஷமோ
நாட்டில் பண்டிகையோ
உற்சாகத்தை அடைக்கிறோம்

வீதியில் நல்லதோ
வீட்டில் கெட்டதோ
உணர்வுகளை அடைக்கிறோம்

அங்காங்கே
ஐஸ்வர்யாராய்கள் அலைகின்றபோதும்
ஆண்மையை அடக்கினோம்

எத்தனையோ அப்பாக்களை
குழந்தைகள் அங்கிள் என்றபோது
நினைத்து நினைத்து எங்களின்
அழுகையை அடக்கினோம்


ஆக
ஆசிரமங்களில் எல்லாம் சாமியார்கள்
அக்கிரமங்களை அரங்கேற்றும் போது
ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது
அயல் நாட்டில் வாழும் நாங்கள் தானே...

என் பெயர்
விளக்கு என்றாலும்
வெளிச்சம் தந்தால் தான் –இங்கே
விசா கொடுப்பார்கள்...




என் பெயர்
ஆரோக்கியசாமி என்றாலும் – நீ
ஆரோக்கியம் என்றால் தான்
இங்கே பத்தாக்கா அடிப்பார்கள்

என் பெயர்
நல்லவன் என்றாலும்
வழக்கு இல்லையென்றால் தான் – இங்கே
வழியனுப்பி கூட வைப்பார்கள்...

ஆகவே
நாங்கள் திடம் வாய்ந்தர்கள் மட்டுமல்ல
தரம் வாய்ந்தவர்களும் கூட

என்குடும்பம்
விவசாய குடும்பம் – ஆனாலும்
அவர்கள் மழையின் வருகையைவிட
என் வருகையைதான் அதிகம்
எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்...

என் கிராமம்
பட்டிக்காட்டு கிராமம் தான்
ஆனாலும் என் நினைப்பு
போன்விட்டா குடித்தாலும் – ஊரில்
போண்டாவுடன் ஒரு டீ கேடக்கவே துடிக்கிறது....


என் படிப்பு
பட்டபடிப்பு என்றாலும்
என் எழுத்துக்கள் கம்யூட்டரில்
எழுதுவதைவிட  ஊரில்
கைநாட்டு காரருக்கு ஒரு
கடிதாசி எழுதத்தானே துடிக்கிறது



என் வயது
நரைக்கிறது வயது – ஆனாலும்
ஆசையெல்லாம் ஓய்வெடுக்க விரும்புவதை விட
ஊரில் ஒரு கிலோ அல்வா வாங்காத்தானே துடிக்கிறது.

இப்படியாக
அன்றாடம் அலுத்துப்போய்
வாழ்பவர்களுக்கு மத்தியில்
ஆவலோடு அனுபவிக்க வாழ்வது
அயல் நாட்டு வாழ்க்கை மட்டும் தானே....

வியர்வை சிந்திய காசு
வெளியில் நின்று ஒரு சிகரெட்பிடித்தால்
பந்தா பன்னுகிறான் என்றான்
என் பக்கத்துவீட்டுக்காரன்...

அழுது முடித்து அனுப்பிய சேலை
உடுத்தி என் மனைவி ஊரில் நடந்தால்
பகட்டாக திரிகிறாள் என்கிறான்- என்
பங்காளி வீட்டுக்காரன்...

குப்பூசை தின்று கொடுத்துவிட்ட பணம்
குடியிருக்க ஒரு குட்டி இடம் வாங்கினால்
வெளிநாட்டு பணம் விளையாடுதோ
என்கிறான் என் எதிர்வீட்டுகாரன்...

இப்படி
பொழுது போகாத
பொறாமைகாரர்களுக்கு மத்தியில்
பழுதுபடாமல் பத்திரமாக இருப்பதால்
பொருமைக்கு எடுத்துக்காட்டாய்
இந்த பொக்கிஷங்களை சொல்லலாமே!




பூமிக்கு காற்று
புயலை தந்தது
பொருத்து கொண்டோம் ஏனென்றால் 
அது தான் நமக்கு மூச்சையும் தந்திருக்கிறது.



பூவையருக்கு பிரசவம்
வலியை தந்தது சகித்து கொண்டோம்
ஏனென்றால் அது தான் நமக்கு
வாரிசையும் தந்திருக்கிறது

அது போல
வெளிநாட்டு வாழ்க்கை
சில பிரிவை தந்தாலும்
பொருத்துக்கொள்வோம்
ஏனென்றால் அதுதானே
நமக்கு பிழைப்பையும்
தந்திருக்கிறது.

நன்றி: குவைத் தமிழ்சங்கம்



மண்டியிடுகிறேன்...

ஆசான் எனும் அச்சில்
வார்த்த வார்ப்பு நான்...
நான்
எழுதும் எழுத்துக்கள்
எழுத்துப்பலகையில்
பல்பமோடு -என்
கைபிடித்து பழக்கி வடித்த
அச்சுக்கோர்வைகள்
ஆசானின் வியர்வைகள்
தன்னலம் பாராத தியாகிகள்
அறிவுச்சுடரேற்றும் ஞானிகள்
ஆசான்
சேவையின் சிகரங்கள்
என்னை உயர்த்திய ஏணிப்படிகள்
வாழ்வித்த ஜீவன்கள்
மத்தன்களை புத்தன்களாய்
மாற்றும் மகான்கள்
ஆண்டுகள் கடந்தாலும்
ஆசானை நினைக்கையில்
மரியாதை மண்டியிடும்
மனதுக்குள் சலாம் போடும்

பெருமையோடு வியக்கிறேன்
பெரம்படி பட்டதால் தான்
நானும் உங்கள் முன்
என்னை மனிதனாய் மாற்றிய
ஆசான் பிரம்மாக்களுக்கு
என் நெஞ்சுக்குள் பட்டாபிஷேகம்

பரபிரம்ஹ தஷ்மை ஸ்ரீ
குருவே நமஹ....