Saturday 31 March 2012

தமிழ் மொழி பற்றிய அறிய பொக்கிஷம்.......

தமிழ் மொழி பற்றிய அறிய பொக்கிஷம்.......

தமிழ் மொழியின் ஆரம்பகட்ட வடிவங்கள்....

Friday 30 March 2012

தினமும் ஒரு பாடல்

மனிதர் யாவர்க்கும் பொதுவில் உள்ள ஓர் பழக்கம் பிறருக்கு அறிவுரை
வழங்குவதாகும். வழங்கும் அறிவுரை எதைப்பற்றியதாக இருப்பினும்
அவ்வறிவுரையை நாம் முதலில் கடைபிடித்தல் அவசியம். அவ்வாறன்றிப்
"பிறர்க்குபதேசம் தனக்கில்லை" எனும் போக்கில் நடந்துகொண்டோமேயானால் நாம்
கூறும் அறிவுரையும் பயனற்றுப் போவதுடன் நம் மீது பிறர்க்குள்ள மதிப்பும்
மரியாதையும் வெகுவாகக் குறைந்து விடும்.
குறிப்பாகக் குழந்தைகளுக்கு நாம் அறிவுரைகளை வழங்குகையில் மிகுந்த
எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். இல்லாவிடில் அவர்களது மனம் கெட்டு
அவர்கள் கட்டுப்பாடின்றித் தவறான பாதையில் செல்ல ஏதுவாகக்கூடும்.

திரைப்படம்: நம் நாடு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு
மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு
லாலாலலாலா லலலலாலலாலா
லாலாலலாலா லலலலாலலாலா
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
லாலலால லாலாலால லாலலா லா
லாலலால லாலலால லாலலாலலாலலா
லாலலால லாலாலால லாலலா

தினமும் ஒரு பாடல்

இறை பக்தி மார்க்கம் மானிடருக்கு வாழ்வின் இன்ப துன்பங்களால் ஏற்படும்
மனக்கிளர்ச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் காத்து அவர்களது மனங்களைப்
பண்படுத்தவென்று அமைக்கப் பட்டதாகும். இம்மார்க்கத்தில் பல விதமான
புராணங்களும் கதைகளும் சொல்லி அவற்றின் மூலம் நீதி நெறிகளை
வலியுறுத்துவதும் துன்பங்களிருந்து விடுதலை பெறும் வழியைக் காட்டுவதும்
நம் முன்னோர்கள் கண்ட வழிமுறைகள். இறைவன் என்றதும் ஆலயங்களில் காண்பவை
போல் பலவிதமான வடிவங்களுடனும் பெயர்களுடனும் வெவ்வேறு தெய்வங்கள் நம்
நினைவுக்கு வருவதுண்டு. இவற்றுள் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது எனும்
ரீதியிலும் இறைத் தத்துவத்தை உணராத மாந்தர் பலர் விவாதித்து,
தங்களுக்குள் மனக்கசப்பு உருவாக வழி வகுத்து அதனால் மகிழ்ச்சியை இழந்து
உற்சாகம் குறைந்து வருந்துதல் அறியாமையே ஆகும்.
இதனையே "அரியும் சிவமும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு" என்று நம்
முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் என்பது ஒவ்வொருவர்
மனப்பாங்ககுக்கேற்ப மாறுபடுதல் இயல்பு. இக்காரணத்தினாலேயே உலகின் பல்வேறு
பகுதிகளில் வாழும் மனிதர்களுள் தோன்றிய ஞானியர் தம் உணர்வினாலும்
அனுபவத்தாலும் கண்டவிதமாக இறைத் தத்துவத்தை உலக மக்களுக்கு
உபதேசித்தவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
"தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலை தான்",
"பிடித்து வைத்தால் பிள்ளையார்" எனு்ம் பொன் மொழிகள் உணர்த்துவது இதனையே.
ஒரு மதத்தினர் வழிபடும் இறைவன் அம்மதத்தவர்களை மட்டும் காப்பதாகக்
கூறுவது மடமை. இறையருள் எல்லோர்க்கும் உரியதாகும். இறை என்று ஏதும்
இல்லையென வாதிக்கும் மனிதர்களுக்கும் இயற்கையுடன் இயைந்து நமது
புலன்களால் உணர முடியாத நிலையில் அண்ட சராசரம் எங்கும்
வியாபித்திருக்கும் இறையருள் உரித்தாகும். ஆத்திகம் நாத்திகம் என்பது
இறைவன் உண்டா இல்லையா எனும் ரீதியில் நியமிப்பதல்ல. எது செய்யத் தக்கது,
செய்யத் தகாதது எது என்பதன் அடிப்படையிலேயே ஒருவர் ஆத்திகரோ நாத்திகரோ
ஆவார்.
இறைவனின் பெயரைச் சொல்லி, புராணக் கதைகளை உண்மை நிகழ்ச்சிகளாக நம்பவைத்து
அவற்றின் மூலதம் தமது சுயநல நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்பவனும்
நாத்திகனே. இறைவன் இல்லை, இல்லவே இல்லை என்று முழங்கிய போதும், உண்மையைச்
சொல்லி உலகினருக்கு நன்மையைச் செய்பவன் ஆத்திகனே ஆவான்.

திரைப்படம்: ஸ்வாமி ஐயப்பன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: தேவராஜன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1975
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே? - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ?
ஸ்ரீமந் நாராயணா
தேவர்கள் உன்தன் குழந்தைகளன்றோ
மறந்தாயோ நீயே? - உன்
தெய்வ முனிவரைக் காப்பத்தற்கென்றே
வருவாயோ நீயே?
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
தோளிலந்த சாரங்கம் எடுத்து வரவேண்டும் நீயே - கணை
தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை
அழித்திடுவாய் நீயே
அநந்த சயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே உன்
அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
சதங்கு படைகளென
எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாரயாணன் என் தலைவனின் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடி படவும்
வேல் கொண்டு வாருங்கள் - இனி
வருவது வரட்டும் முடிவினைப் பாரிப்போம்
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே துணை தருவாய் பெருமாளே

தினமும் ஒரு பாடல்

ஏறத்தாழ கி.பி. 1000 முதல் கி.பி. 1947 வரையிலான காலங்களில் நமது இந்தியா
முகலாயர்கள் மற்றும் வெள்ளையரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாலேயே மஹாகவி
பாரதியார் தமது "சுதந்திரப் பயிர்" எனும் பாடலில்
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?
என்று எழுதினார் போலும்.
முதலில் இந்தியாவின் மீது படையெடுத்த கஜினி முகம்மது பெரும்பாலும்
சோமநாதர் ஆலயம் போன்ற இடங்களில் உள்ள செல்வங்களைக் கொள்ளையிட்டுச்
சென்றதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இவருக்குப் பின்னர் இந்திய
மண்ணில் அடியெடுத்து வைத்த மொகலாய மன்னர் முகம்மது கோரி இந்தியாவில் தனது
ஆட்சியை நிலைநிறுத்தும் எண்ணத்துடன் பலவிதமான அரசியல் சூழ்ச்சிகளைச்
செய்து தமது எண்ணத்தை நிறைவேற்றினார். அவர் செய்த மிகப் பெரிய
சூழ்ச்சிகளுள் ஒன்று ஆஜ்மீர் அரசனான பிரித்விராஜ் சௌஹான் கன்னோஜ் மன்னன்
ஜெயச்சந்திரனின் புதல்வி சம்யுக்தாவைக் கடத்திச் சென்று திருமணம்
செய்துகொண்டதால் ஏற்பட்ட பகையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு
ப்ரித்விராஜனின் மேல் படையெடுத்து முதலில் தோற்றாலும் பின்னர்
பெரும்படையுடன் வந்து அவரை வென்று அவரது ராஜ்ஜியத்தினைக்
கைப்பற்றியதாகும்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியைக் கதையாக உருவாக்கி
தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்கு மாபெரும் ஒரு விருந்தாக எம்.ஜி.ஆர்.
பிருத்விராஜனாகவும் எம்.என். நம்பியார் முகம்மது கோரியாகவும் பத்மினி
சம்யுத்தையாகவும் நடிக்கப் படைத்தது சரஸ்வதி பிக்சர்ஸ் நிறுவனம்.

திரைப்படம்: ராணி சம்யுக்தா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1962
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

தினமும் ஒரு பாடல்

இந்தியா ஒரு விவசாய நாடு. நம் நாட்டில் விவசாயம் பல்கிப் பெருகப்
பெருந்துணை புரிவன நம் நாட்டில் ஓடும் வற்றா ஜீவ நதிகள் ஆகும்.
விவசாயத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக,
"இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணறும் பெரு நாடு
கனியும் கிழ்ங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு"
எனும் பாரதியின் கூற்றை மெய்ப்பித்துள்ளனர் நம் நாட்டு விவசாயிகள்.
காவிரி தென்பெண்ணை பாலாறு பொருள்
கண்டதோர் வையை பொருனை நதி என
மேவிய ஆறு பல ஓடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு
என்று மஹாகவியால் பாடப்பெற்ற தமிழ் நாடும் இந்தியாவில் விவசாயத்தில்
சிறந்து விளங்கும் முக்கியப் பகுதியாகும். இவ்வாறிருக்க சில காலமாக
விவசாய நிலங்கள் முறைகேடான விதத்தில் ஆக்கிரமிக்கப் பட்டு சட்ட
விரோதமாகப் பல கட்டுமானப் பணிகளுக்கும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் என
மாற்றப்பட்டு வருவது மிகவும் வருந்தத் தக்கது. இதனால் நாட்டில் உணவுப்
பஞ்சம் ஏற்படும் அபாயம் உண்டாவதுடன் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர்ப்
பஞ்சமும் தலை விரித்தாடும் அபாயமும் உருவாகி வருகிறது.
மேலும் ஆற்று நீர் குறித்த காலத்தில் விவசய நிலங்களுக்குக் கிடைக்காமை,
வெள்ளம் முதலிய இயற்கைச் சீற்றங்கள், வியாபாரிகளின் சந்தை ஆக்கிரமிப்பு
மற்றும் அரசியல் சூழ்நிலை உட்பட்ட பல காரணங்களால் விவசாயிகள் பலர் தமது
கைப்பொருளெல்லாம் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையும் நமது
நாட்டில் சமீப காலத்தில் உருவானது மிகவும் வேதனை தருகிறது.
இத்தகைய விபரீதங்கள் மேலும் தொடராமல் தடுக்கப் பாடுபடுவது இந்திய மக்கள்
ஒவ்வொருவரது கடமையாகும். முறைகேடுகள் நிகழாவண்ணம் தடுக்க ஏற்ற
வழிமுறைகளைக் கண்டு செயல்படுத்துதல் அவசியம். இல்லையெனில் இந்த உலகில்
மனித இனம் வாழ முடியாத நிலை விரைவில் உருவாகக் கூடும்.

திரைப்படம்: பழனி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.
ஸ்ரீநிவாஸ்
ஆண்டு: 1965
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா
திருமண நாளம்மா
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
போர் செய்யும் வீரன் ஏது?
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

தினமும் ஒரு பாடல்

இவ்வுலகே ஒரு அதிசயம். நாம் வாழ்வதும், நம் கண் முன்னர் பல விதமான
எண்ணிலடங்கா உயிரினங்கள் வேறுபட்ட தோற்றத்துடனும் குண நலன்களுடனும்
வாழ்வதும் அதிசயம். சூரியனும் சந்திரனும் அந்தரத்தில் நமது கண்களுக்கும்
கருத்துக்கும் புலப்பாடாத பாதைகளில் தினந்தோறும் பவனி வருவதும்,
வானமெங்கும் தோரணங்கள் கட்டியது போலப் பல கோடி நட்சத்திரங்கள் விதவிதமான
அமைப்பிலான குழுக்களாய் விளங்கி ஒளிர்வதும், பல விதமான பயிர்களும் செடி
கொடிகளும் பழங்களுடனும் காய்களுடனும் திகழ்வதும் இவை யாவும் நாம்
என்றென்றும் கண்டுணர்ந்து களிக்கத்தக்க அதிசயங்களன்றோ?
இவ்வாறு இருக்கையில் நமது புலன்களின் உணர்ச்சிக் குறைபாடுகளை தமக்கு
சாதகமாக்கிக் கொண்டு மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் மாயாவிகள்
செய்யும் கண்கட்டு வித்தைகளை அதிசயமென நம்பி ஏமாறுவது மனிதனின்
அறியாமையைக் காட்டுகிறது. உலகெங்கும் இயற்கையாகவே இலவசமாகக் கிடைக்கும்
இன்பம் தரும் பலவிதமான வளங்களையும், அன்பைப் பொழியும் உயிர்க்
குலத்தையும் உணராமல் பகட்டான வாழ்வுக்காக ஏங்கிப் பணம் தேடுவதொன்றே
குறிக்கோளாக வாழ்வது மடமையே.
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன்
- பாரதியார்

படம்: இந்தியன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
பாடல். : வைரமுத்து
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு?
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் - பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்!
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓர் ஆனந்தம் பந்தம் பேரானந்தம் கண்ணே
உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

தினமும் ஒரு பாடல்

விஸ்தாரமான ராக ஆலாபனையுடன் ஸ்வர சஞ்சாரங்களும் விதவிதமான சங்கதிகளுடன்
தனி ஆவர்த்தனமும் கலந்து படைக்கப்பட்ட சாஸ்திரிய சங்கீதத்தை சற்றே
எளிதாக்கும் விதமாக, ராக ஆலாபனை, ஸ்வர சஞ்சாரங்களைச் சிறிதளவு குறைத்து
சினிமாப் பாடல்களை அமைத்த காலம் மாறி, சாஸ்திரிய சங்கீதத்தை மேலும்
எளிமையாக்கி பாமர மக்களும் கேட்டு இன்புறும் வண்ணம் மெல்லிசையாக
வடிவமைத்துத் தந்த தமிழ்த் திரையுலக மேதைகள், காலப்போக்க்கில் மேற்கத்திய
இசையின் பரவலைத் தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகவே, தாங்களும்
மேற்கத்திய இசை வடிவில் தமிழ்த் திரைப் பாடல்களை வடிவமைக்கத் தொடங்கி
அதில் உலக சாதனையும் படைத்துள்ளனர்.
இதே கதியில், அனேகப் பாடல்கள் பெரும்பாலும் பரதம் முதலான பாரம்பரிய
நடனங்களையும் நடனங்கள் இன்றி வரு்ம் காட்சிகளின் சூழ்நிலைகளையும் மனதில்
கொண்டு இயற்றி இசையமைக்கப் பட்ட வழக்கம் மாறி மேற்கத்திய நடனம் இளைய
தலைமுறையினரிடையே ஏற்படுத்திய தாக்கத்துக்கு ஈடு கொடுக்கும் விதமாக
அமைக்கப் படுகின்றன. இசை மாறினாலும், நடை, உடை, பாவனைகள் மாறினாலும்
தமிழின் மீதுள்ள ஈடுபாடும், இயற்கையின் மேல் கொண்ட காதலும், நமது தாய்
மண்ணின் மாண்பினைப் போற்றும் பண்பும் இன்னமும் நமது நாட்டு மக்களுக்கு
அன்று போலவே இன்றும் இருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது.

திரைப்படம்:ஆ-ஆ-இ-ஈ
இயற்றியவர்: ப்ரியன்
இசை: விஜய் ஆன்டனி
பாடியோர்: தினேஷ், ராகுல் நம்பியார்
ஆண்டு: 2009
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
சிம்சுகும்குகும் சிம் சும்சும் சிகு சிம்சுகும்குகும் சிம் சும்சும்
சிம்சுகும்குகும் சிம் சும்சும் சிகு சிம்சுகும்கும் சிம் சும்சும்
அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்
நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு
மரங்கள் மெல்லத் தலையை ஆட்டும்
பச்சை சேலை கட்டிக் கொண்டு
வயல் வெளிகள் முகம் காட்டும்
ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம்
ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும்
பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும்
அஆஇஈ சொல்லித் தருதே வானம், வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம், உருவம் தீட்டிச் சென்றது மேகம், மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்
லல்லலலை லைலைலைலோ லல்லலலை லைலைலைலோ
லலலலலை லைலைலைலோ லைலைலைலைலோ
லல்லலலை லைலைலைலோ லல்லலலை லைலைலைலோ
லல்லலலை லைலைலைலோ லைலைலைலைலோ
கமபநிஸ் நிஸ் நிஸ் நி ஸரிகம காரிகாரி ஸ்நீஸ்
பாதநீஸ் கமகம ரிகரிகஸ
ஓ காற்றில் கலந்திருக்கும் மண்வாசம்
எங்கள் மனசுக்குள்ளும் குடியிருக்கும்
ஊருக்கே உண்டான தனிப்பாசம்
எங்களுடைய பேச்சிலும் மணந்திருக்கும்
பகிர்ந்து உண்ணும் கூட்டாஞ்சோறின்
ருசியை வெல்லும் உணவில்லை
தாவணிப் பெண்கள் அழகுக்கு இங்கே
உலக அழகியும் இணையில்லை
சொத்து சுகங்களால் மனசு நிறையலாம்
வயிறு நிறையாது நண்பா
நெல்மணிக்கு மாறாகத் தங்கத்தை நாமும் தான்
தின்ன முடியாது நண்பா ஆஆஆஆஆஆ
அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்
பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
லவுலவுலவுலவுலே
ஊஹூ ஊஹூஹு ஆஹாஆஹாஹாஹாஹா
காலையில் கண் விழிக்கும் சூரியனும்
பனியில் முகம் துடைத்தே தலை சீவும்
புழுதிகள் சுற்றித் திரியும் சாலைகளில்
மழைத் துளி கை கோர்த்தே நடைபோடும்
கள்ளம் கபடம் இல்லா மனதில் சோகம் தங்க முடியாதே
சேர்ந்து வாழும் வாழ்க்கை போலே சுகமும் இங்கு கிடையாதே
ஒவ்வொரு நொடிகளும் நமக்காய்ப் பிறந்தது
முழுசா அனுபவி நண்பா - நம்
எதிரி எதிரிலே வந்து நின்றாலும்
அன்பு காட்டுவோம் நண்பா ஆஆஆஆஆஆ
அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்
நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு
மரங்கள் மெல்லத் தலையை ஆட்டும்
பச்சை சேலை கட்டிக் கொண்டு
வயல் வெளிகள் முகம் காட்டும்
ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம்
ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும்
பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும்
அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்

தினமும் ஒரு பாடல்

இவ்வுலகில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. நாமே நமக்கு சொந்தமில்லாத
போது பிற பொருட்கள் நமக்கு எவ்வாறு சொந்தமாக முடியும்? இவ்வுண்மையை உணராத
மனிதன் ஆணவ மிகுதியால் தன்னிலும் வலிமை குறைந்த சக மனிதரை அடக்கி ஆளும்
எண்ணம் கொண்டு பொருளாராதார ஏற்றத் தாழ்வை உருவாக்கி, பொருளற்ற ஏழை
எளியோரைப் பிறர் செய்யத் தயங்கும் துப்புறவு முதலிய பணிகளைச் செய்ய
வைத்து, நாளடைவில் தீண்டாமை எனும் பேயை உருவாக்கினான். இதனை மனிதர்
குலத்துக்கு உணர்த்தி, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் சேவை மனப்பான்மை
கொண்ட பல ஞானிகள் தங்களது அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து
உலகுய்யவென்று வகுத்ததுவே இறைத் தத்துவம்.
தீண்டாமை உணர்வினால் பிற மனிதர்களால் இழிகுலத்தவர் என்று கருதித்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் தன் இறை பக்தியால் பிற மனிதர்
அனைவரிலும் மேம்பட்டு, இறையருளைப் பெற்ற கதையே நந்தனார் சரித்திரம். இதனை
"நந்தனார் சரித்திரக் கீர்த்தனை" என்ற அழகிய பாடல் தொகுப்பாக இயற்றி
நமக்களித்தவர் கோபாலகிருஷ்ண பாரதி. ஒரு கிராமத்தில் ஒரு
நிலச்சுவான்தாரரிடம் பணியாளாக இருக்கும் நந்தன் மார்கழி மாதம் திருவாதிரை
நாளன்று சிதம்பரத்தில் குடிகொண்டிருக்கும் நடராஜப் பெருமானுக்குச்
செய்யப்படும் சிறப்பு வழிபாட்டைக் காண விரும்ப, "மாடு தின்னும் புலையா
உனக்கு மார்கழித் திருநாளா?" என்று அவனது எஜமானர் அவரைத் தடுக்க, நந்தன்
மீண்டும் மீண்டும் மன்றாடி சிதம்பரம் போக அனுமதி வேண்ட, அவனை
எவ்வாறாகிலும் தடுத்து நிறுத்தவும் அதே சமயம் அவனது நச்சரிப்பிலிருந்து
விடுபடவும் எண்ணிய எஜமானர் ஒரே நாளில் அவரது நிலத்தில் விளைந்திருந்த
பயிர்களையெல்லாம் அறுவடை செய்தால் அவரை சிதம்பரம் போக அனுமத்திப்பதாக
வாக்களிக்க, செய்வதறியாது நந்தன் திகைத்து நிற்கவும், இறைவனருளால்
விடியுமுன்னரே அனைத்துப் பயிர்களும் அறுவடை செய்யப்பட்டிருக்கக் கண்டு
ஆண்டவனின் மகிமையை எண்ணி வியக்கிறார்.
வேறு வழியின்றித் தன் வாக்குறுதியைக் காக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்ட
எஜமானரும் அவரை அனுமதிக்க, நந்தனார் தில்லை நடராஜரைத் தரிசித்து முக்தி
பெற்றதாக நந்தனார் சரித்திரம் கூறுகிறது.
வாருங்கள், நந்தனார் கண்டு மகிழ்ந்த சிவலோக நாதனை நாமும் தரிசிப்போம்.

திரைப்படம்: நந்தனார்
இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதி
இசை: எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வரராவ்
பாடியவர்: எம்.எம். தண்டபாணி தேசிகர்
ஆண்டு: 1942
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்
அற்ப சுகத்தை நினைந்தோம்
அற்ப சுகத்தை நினைந்தோம் - அரன்
திருவடிகளை மறந்தோம் - நாம்
அற்ப சுகத்தை நினைந்தோம் - அரன்
திருவடிகளை மறந்தோம்
கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கானல் ஜலம் போலே எண்ணி
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்
ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம் - நாம்
ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம்
பாசமகல வழி தேடாமல்
எமப் பாசமகல வழி தேடாமல்
பரதவிக்கும் பாவியானோம்
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம்

தினமும் ஒரு பாடல்

நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் நம் மனதில் நிலைநிறுத்திச் செயல்படும்
லட்சியம் "வெற்றி" ஆகும். வெற்றி என்பது ஒருவரின் நோக்கத்துக்கேற்றவாறு
தனித்தன்மை பெறுகிறது. ஒருவரது வெற்றி மற்றொருவரது தோல்வியாகலாம் அல்லது
மற்றவரது வெற்றியும் ஆகலாம், மற்றவரின் வெற்றி தோல்வியுடன்
தொடர்பின்றியுமிருக்கலாம்.
ஒரு மருத்துவரது வெற்றி அவர் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை
குணப்படுத்துவதில் கிடைக்கிறது. ஒரு நோயாளியின் வெற்றி நோயிலிருந்து
குணமடைந்து வாழ்வதில் கிடைக்கிறது. இங்கே மருத்துவர் வெற்றி கண்டால்
நோயாளியும் வெற்றி காண்கிறார். சூதாட்டத்தில் பொருளை இழப்பவன்
தோல்வியடைகையில் அவன் இழந்த பொருள் தனக்குக் கிடைக்கப்பெற்ற வேறொருவன்
வெற்றியடைகிறான்.
வியாபாரி விற்பனை அதிகரித்து லாபம் நிறைய ஈட்டுகையில் வெற்றி பெறுகிறான்.
ஒரு சமூக சேவகன் சமூக நீதியை நிலை நாட்டுவதில் வெற்றியைக் காண்கிறான்,
அச்சமூக சேவையில் அவன் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்து உயிரையும்
இழந்தாலும் வெற்றிபெற்றவனாகவே கருதப்படுகிறான்.
ஒரு துறையில் வெற்றி பெற்றவன் அதே துறையில் வெற்றி பெறாத மற்றொருவனைத்
தோல்வியடைந்ததாக எண்ணுதல் அறிவுடைமை ஆகாது. மற்றவன் எத்துறையில் வெற்றி
பெற்றான் என்பதை அறிவுபூர்வமாக ஆராய்ந்தறிதல் நன்று.
எத்துறையிலும் வெற்றி பெற விடாமுயற்சி மிகவும் அவசியம். வெற்றிப்
பாதையில் அடியெடுத்து வைக்க முயல்கையில் பல இடையூறுகள் வந்துற்ற போதும்,
அவற்றால் மனம் தளர்ந்து முயற்சியைக் கை விடாமல், தொடர்ந்து பாடுபடுபவன்
வெற்றி இலக்கை எய்துவது திண்ணம்.

திரைப்படம்: ஊமை விழிகள்
இயற்றியவர்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1986
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

தினமும் ஒரு பாடல்

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" எனும் பழமொழியை அனைத்து
இந்திய மக்களுக்கும் நன்கு விளங்க வைத்தது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல்
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களி்ன் ஆதிக்கம். அவர்கள் நம் நாட்டின் மேல்
ஆதிக்கம் செலுத்த ஏதுவாயிருந்தது கி.பி. 1608 ஆண்டில் அவர்கள் நம்
நாட்டினுள் வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் கிழக்கிந்தியக் கம்பெனி
எனும் பெயரில் உள்ளே நுழைந்த காலத்தில் நம் நாடு பல்வேறு சிறு
தேசங்களாகப் பிரிந்திருந்து அவற்றை ஆண்ட மன்னர்கள், சிற்றறரச்கள்
முதலானோ்ர் ஒருவரோடொருவர் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காகப் போரிட்டு
வந்த நிலைமையேயாகும்.
நம் நாட்டினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டு சுதந்திர இந்தியாவை உருவாக்க
எண்ணற்ற தலைவர்களும் தொண்டர்களும் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும்
தியாகம் செய்து 90 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து போராடி, வெற்றி கண்டு
நாமெல்லோரும் சுதந்திரமாகச் செயல்படும் நிலைமையை ஏற்படுத்தித் தந்தனர்.
அவ்வாறு அவர்கள் அரும் பாடுபட்டுப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் 50
ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே முற்றிலும் இழந்து விட்டோம். இன்று
நம் நாட்டில் அரசு நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டமடைந்த நிலையில் அந்நிய
நாட்டவர் மூலதனத்தில் தொழிற்சாலைகள் நடப்பதும், அவற்றில் நம் நாட்டவர்கள்
ஊதியத்துக்காகப் பணி செய்வதும் வாடிக்கையாகியுள்ளது.
இத்தகைய இழிநிலையடையக் காரணம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை இல்லாத நிலை
உருவானதுவே ஆகும். இதற்கு சாதிமத பேதமும் தனி மனித ஒழுக்கக் குறைவுமே
முக்கியக் காரணங்கள். "ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல்
என்ன நீதி?" என்ற பாரதியின் பாட்டு இக்காலத்திற்கும் பொருந்துவதாகும்.
சாதிமத பேதத்தைத் துறந்து ஒற்றுமையாய் வாழ்ந்து நாட்டை உயர்த்தப்
பாடுபடுவது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.

திரைப்படம்: அன்புக் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா?
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகததை நிறுத்த முடியுமா?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

தினமும் ஒரு பாடல்

தமிழ்க் கவிஞர்களுள் சாமான்ய மக்கள் முதல் கல்வியிலும் தமிழ் இலக்கிய
ஞானத்திலும் சிறந்து விளங்கும் அறிஞர் பெருமக்கள் வரை அனைவரது மனதிலும்
நீங்கா இடம் பெற்றவர் கவியரசு கண்ணதாசன். கருத்தைக் கவரும் தமிழ்க்
கவிதைகளை எத்தகைய சூழ்நிலைக்கும் ஏற்றவாறு எளிமையாகவும், இனிமையாகவும்
திகழும் வித்த்தில் இயற்றும் திறனுடன் கவியரசர் இயல்பாகவே இசை ஞானம்
கொண்டு விளங்கியதால் இவரது பாடல்களுக்கு இசையமைத்த இசை மேதைகளான
திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன், மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.
விஸ்வநாதன், டி,கே. இராமமூர்த்தி, குன்னக்குடி வைத்தியநாதன் முதலானோர்,
இசையுடன் இசைந்த இவரது செந்தமிழ்க் கவிதைகளுடன் இணைந்து விளங்குமாறு பல
பாடல்களையும், இராகமாலிகைகளைத் தமிழ்த்திரையில் சிறப்புடன்
வழங்கியுள்ளனர்.
கவியரசரைத் தமிழ்த் திரையுலக வாசகர்களுக்கு நேரில் காட்சிதர வைத்த
திரைப்டங்களுள், இரத்தத் திலகம், கருப்புப் பணம், அபூர்வ ராகங்கள் யான்
கண்டு களித்தவை ஆகும். அபூர்வ ராகங்கள் திரைக்கதையில் இவருக்கு யாதொரு
பங்கும் இல்லாவிடினும் அப்படத்தில் சூரி எனும் பெயர் கொண்ட மருத்துவராக
நடிக்கும் நாகேஷ் அவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறும் கவிஞர்
கண்ணதாசனாகவே இடம்பெற்ற காட்சி தமிழ்த் திரை ரசிகர்களின் நெஞ்சை
விட்டகலாததாகும்.
இக்காட்சியில் கவியரசருக்கு சிகிச்சையளிக்கும் நாகேஷ் தன் மேல் ஒரு கவிதை
பாடும்படி இவரிடம் கேட்க இவர் இயற்றிய கவிதை:
அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர்
பெருமருந்துயர் பக்திஎன்பதைப் பெரியவர் பலர்பேசுவர்
சுரமருந்தென எதனையோதரும் சூரிஎன்ற மருத்துவர்
கரிமெலிந்தது போல்மெலிந்தவர் காலகாலங்கள் வாழ்கவே!
இதைக் கேட்கும் நாகேஷ் ஆஹா! அது தான் கண்ணதாசன் எனப் புகழ, "அது தான்
உங்கள் மருத்துவத்துக்கு ஃபீஸ்" என்று கவியரசர் ஒரு நகைச்சுவை வெடியைப்
போட, சிரிப்பொலியால் திரையரங்கமே அதிர்ந்ததுண்டு.

திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்,
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டி: 1975
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்.... மோகம்.... மோ..கம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திர லோகத்து சக்கரவாகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

Thursday 29 March 2012

ஆயுதம் பூக்கும் போதி மரம்!!

ஆயுதம் பூக்கும் போதி மரம்!!

புலவர்கள் மன்னனைப் புகழந்து பாடி பரிசில் பெறுவது பண்டைய தமிழ் மரபு. கவியரங்கம் என்ற பெயரில் கவிஞர்களை வைத்து தன்னைத் ததிபாடச் சொல்லி அந்தப் பண்பாட்டைப் பேணுபவர் தமிழக முதல்வர்.

வாலி, வைரமுத்து வரிசையில் கவிக்கோ அப்துல் ரகுமானும் அந்த அரங்கங்களில் கவி பாடுவார். அவர் முன்னொரு காலத்தில் (22 - 10 - 1987) எழுதிய கவிதை.. இன்றைக்கும் பொருந்துகிறது. இன்றைக்கு கருணாநிதி கவியரங்கம் நடத்தி கவிக்கோ இதைப் படிக்க வேண்டும்.

*******

அங்கே
பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன;
'எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?" என்று
விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.

அங்கே
குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன;
நாம்
பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுகொண்டிருக்கிறோம்.

அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக்கொண்டிருக்கிறார்கள்;
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக்கொண்டிருக்கிறோம்.

அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்;
நாம்'கற்பில் சிறந்தவள் கண்ணகியா ? சீதையா ?" என்று
பட்டிமண்டபம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
ரத்தம் சொரிந்துகொண்டிருக்கிறார்கள்;

நாம்
இருட்டுக் காடுகளுக்கு
வேர்வை வார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அவர்கள்
சயனைட் அருந்திக்கொண்டிருக்கிறார்கள்;
நாம்
அதர பானம் பருகிக்கொண்டிருக்கிறோம்.

இதில் வியப்பேதும் இல்லை.

அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்.

இதோ !
தேவ வேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன.

இதோ !
ரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின்மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன.

இதோ !
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதோ !
வெள்ளக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக்கொண்டிருக்கிறார்கள்.

அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கிறது.

இன்று
அசோகச் சக்கரதின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்பெருகிக்கொண்டிருக்கிறது.

தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கிறது.

ஈ(ர)ழத்துளிகள்

ஈ(ர)ழத்துளிகள்

பதுங்கியிரு இப்பதுகுழியில்

அப்பா வந்தாலும் வருவேன்

________________________________________

கணக்குப் பாடம்

ஒன்று

இரண்டு

மூனு

நாலு

அம்மா மொத்தம் நாலு குண்டுகள்

உன் மீது?

________________________________________

மழை வேண்டாமென வேண்டும்

விசித்திர மனிதர்கள் நாங்கள்..

குண்டுமழை வேண்டாமென வேண்டும்

மனிதர்கள் நாங்கள்.

சில சமயம் சந்தேகம் வலுக்கின்றது

நாங்கள் மனிதர்கள் தானா?

________________________________________

அப்பா எனக்கு

பேய் பூதம் பிசாசு என

வரைந்தேதும் காட்டியதில்லை

நேரில் நிறைய பார்த்ததுண்டு

________________________________________

இயலாமையின் உச்சத்தில்

வழிவதெல்லாம் மெளனம் தான்

அழுவதற்கும் சக்தியெல்லாம்

என்றோ போய்விட்டது

________________________________________

ஆற்றின் நிறமென்னவென கேட்டதற்கு

சிகப்பு என்கின்றான்.

என்னிடம் இனி கேள்வியில்லை.

வாழாமலே கெட்ட (தமிழ்) இனம்!

வாழாமலே கெட்ட (தமிழ்) இனம்!

“குழல் கொடுமை யாழ் கொடுமை”
குழல் கொடுமை யாழ் கொடுமை என்பர்
தம்மக்கள் குரல் மறையக் காண்கின்றவர்!
ஆண்மை இருக்கும் இறையே -
இனியாவது நாங்கள்
இறையாண்மைக்கு இரையாகாமல் காப்பாய்!
அன்றோ ஒரு காலம் உண்டு!
வனம் எல்லாம் வனப்புடனே நின்று!
இன்றும் ஒரு ஞாலம் உண்டு
இனம் மரிக்கக் காணாமல் கண்டு!
ஒன்பதுதான் கிடைத்தது – இனி
ஓய்வெடுக்கப் போகலாம்!
இருபத்தெட்டு கிடைத்தது – இனி
இலாக்காக்கள் கேட்கலாம்!
ஒன்றுமே கிடைக்கவில்லை – இனி
ஒப்பாரி வைக்க வேண்டாம்!
தனியாகவே வந்துவிட்டோம்- இனி
தமிழாவது மண்ணாவது?
பாவிகளா -
ஆதிமனிதனைப் போல்
அர்த்தமில்லா ஊளையோடே
இருந்து இருக்கலாம்!
பாழாய்ப்போன மொழியை நம்பாத
ஊமை சகோதரர்களே உங்களைப் பார்த்துப்
உண்மையிலேயே பொறாமைப் படுகிறோம்!
நாங்கள் இப்போதெல்லாம்
வருத்தப்பட்டு பாரம் சுமப்பது இல்லை!
உயிரும், உற்றார் உடல்களும்
என்றைக்காவது பாரமாகுமா என்ன?
நாங்கள் இப்போதெல்லாம்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
என்று நினைப்பது இல்லை! – ஒருவேளை
ஏதாவது நன்றாகவே நடந்தாலும்
அதைப் பார்ப்பதற்கு நாங்கள்
இருக்கப் போவதுமில்லை!
நாங்கள் இப்போதெல்லாம்
மேற்கு நோக்கி புனிதம் தேடி
யாத்திரிப்பதில்லை! – ஏனெனில்
எங்கள் வழி நெடுகிலும்
மனிதம் மண்ணுக்கு உள்ளேதான்
மலையாகக் கிடக்கிறது!
அழுத பிள்ளை பால் குடிக்குமாம்
உங்கள் ஊரில்! – இங்கோ
குழந்தைகள் அழுவது -
அம்மா நான் உயிரோடு இருக்கிறேன்
என்று உணர்த்திடவே!
சங்க காலம் தொட்டு வரும்
சண்டை காலம் முடியவில்லை!
எங்க காலம் போயாச்சு! – எம்
பிள்ளையாச்சும் பிழைக்குமா?
பல நூறு ஆண்டுகள் முன்
போரிலே வென்ற மன்னர்
பகை நாட்டின் வயல் அழித்து
வெண் கடுகும் ஆமணக்கும்
விதை விதைத்து – கோவேறு
கழுதைகளால் உழுதிட்டு
கடுஞ்சினத்தை தீர்ப்பனராம்!
இன்றும் பாவி மக்கள்
போரென்ற பேரினிலே
பார் முழுக்கப் பார்த்திடவே
இரு நாட்டின் இனம் அழித்து
ஈயத்தை இதயத்தில்
விதை விதைத்து – ஈனப்
பன்றிகளால் உழுதிட்டு
உயிர் அறுவடை செய்கின்றார்!
வாழ்க உங்கள்
விஞ்ஞான விவசாயம்!
வளர்க உங்கள்
நவீன யுகப் புரட்சி!
எங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு
அற்ப மகிழ்ச்சி! -
இத்தலைமுறையில் யாருமிங்கே
வாழ்ந்து கெட்டவர் இல்லை!
நாங்களெல்லாம் – ஒரு நாள் கூட
நிம்மதியாக வாழாமலே கெட்டுவிட்டோம்!

Tuesday 20 March 2012

எட்டுத்திக்கும் புகழ் மணக்க

எட்டுத்திக்கும் புகழ் மணக்க
இருந்த பெருந்தமிழணங்கே
உன் பிள்ளைகளை
சிங்கள ஓநாய்கள்
சிதைத்தபோது
எங்கிருந்தாய்
மொழிகாத்தால் போதுமென்று
இருந்து விட்டாயா

உன் குடிகாக்க உனக்கு யாரும்
கற்றுத்தரவில்லையா
பிடிமண்ணும் வேண்டாமென்று
பேதலித்து நடந்து வந்த
எம் தமிழ்க்குடியையும்
பேடியவன் காலாட்படையோவென்று
கணநேரம் கலங்கி கொன்று விட்டானோ
நீ கரம்கொடுத்து சிரம் காப்பாயென்று
விதிநம்பிய மதி நம்பி
தமிழே கதிஎன்று வந்தோரை
நீயும் ஏன் கைவிட்டாய்

எம்
தமிழ்த்தாலிகளை காப்பாற்ற
இத்தாலியிடம்
கை ஏந்த வைத்து
எந்தத்திக்கு சென்றாய், நீ
எமையேன் இங்கு புலம்பவிட்டாய்

நன்றி திரு.தேவதாஸ்.