Wednesday 11 January 2012

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

அரசியல் என்று சொல்லி
உன்னை மடையனாக்குகிறான்
தமிழ் தமிழ் என்று சொல்லி

போதிருமனும் போயாச்சு
குங்பூ வும் சீனா போச்சு
கழனிகாட்டுல சுட்டெரிக்கும் வெயிலுல
மஞ்சளை வெலையவச்ச
அமெரிக்கா உரிமையாக்க
தமிழா இன்னுமா நீ உறங்குகிறாய்..
.
பாலும் தானியமும்
பச்சை காய்கறிகளும்
அன்றாடம் ஜீவிக்க நீ கொடுத்தும்
தமிழா தமிழகத்திலுள்ள
மலையாளத்தான் உபயோகிக்கும்
தண்ணீர் கூட தர மறுக்கிறான்
தமிழா இன்னுமா நீ உறங்குகிறாய்.....

விழி எழு
தமிழனாய் தலை நிமிர்
திருப்பியடி .....

Monday 9 January 2012

என்னவள் ஒரு தேவதை

என்னவள் ஒரு தேவதை

பால்கனி சுவற்றில்
வெட்சி மலர் போல்
உன் விரல்களைப்
பூக்கவிட்டு நிற்கிறாய்...

உன்னருகே வந்து
உன் இதழ் பிரியும்
அத்தனை வார்த்தைகளையும்
என் செவிகளில்
ஒன்று சேர்த்து நிற்கிறேன்...

மலர் தாவும் வண்டாய்
என் விரல்கள், சுவற்றில்
பூத்த உன் விரல்களில்
வந்தமரமுயல,
அதை முன்பே எதிர்பார்த்தவளாய்
கூட்டுக்குள் அடைந்த நத்தைபோல்
உன் விரல்களை
இழுத்துக் கொண்டு
எதிர்த் திசையில் நிலாமுகம் திருப்பி
இதழோரம் மெல்லிய
புன்னகையைத் தவழ விடுகிறாய்...

நீ தவழவிட்ட
பொன்னகையில்
மறைந்து நின்ற
ஊடல் முத்துக்களை ரசித்தவாறே
என் இதழ் தவறிச்
சிந்திய அசட்டுச்சிரிப்பை
சேகரித்துக் கொண்டிருந்தேன்
நினைவடுக்குகளில்...

அத்தான் என்றழைப்பாள்

அத்தான் என்றழைப்பாள்

அத்தான் என்றழைப்பாள்
அதிகாலை பொழுதினிலும்
கனி இதழ் ரசம் கொடுப்பாள்

புரியாத பாஷையிலே
செல்லமாய் திட்டுவாள்...
கண்கொட்ட விழித்திருப்பாள்
காணாது தவித்திருப்பாள்

நல்லிரவும் தாண்டிடுமே
வெள்ளி நிலா மறைந்திடுமே
மணிகணக்காய் பேசிடுவாள்
மழைபோல சிரித்திடுவாள்

உறக்கத்திலே தவழ்ந்திடுவாள்
உன்மையிலே என் மழலையவள்
கண்ணிமையில் கவிவடிப்பாள்
கவிதையிலே வில்தொடுப்பாள்

என்
காதல் அதை சொல்கையிலே
கொள்ளென நகைத்திருப்பாள்
காலம் வர காத்திருந்தேன்
கடிதம் ஒன்று தந்துவிட்டாள்

அரவம் ஒடுங்கிய தருணத்தில்
அடுக்கடுக்காய் கணைதொடுத்தாள்
அவள் இதயத்தில் இடம் கொடுக்க

இடைவெளி இல்லாத
இனிமையான இடம் கேட்டேன்
சம்மதம் தந்தவள்
அன்றே என்னை
அத்தான் என்று அழைத்துவிட்டாள்.

வேர்களாய் துளிறிடத்தானே கூடினோம்

வேர்களாய் துளிறிடத்தானே கூடினோம்
இன்பம் மட்டுமே கண்டிட
துன்பங்களும் சுமந்து
துவங்கினோம் யாத்திரை

மீட்டால் திரும்ப மீளாத ஞாபகங்கள்
மிளிரும் சிநேகம் விடர்த்தும்
பூந்திங்களாய் தொடடருகையானு என் யாத்திரை...

சிந்தனை சிறகடிக்கும் கடல்போல... தமிழ்
சிற்ப்பங்கள் ஆயிரம் ஜனிக்கும் - தூரிகையால்
துக்கத்தின் முள்ளுகள் புஷ்ப்பங்களாய் தொடுத்து
எழுதி தொடருகையானு என் யாத்திரை...

தீர தேசங்கள் சென்றாலும் தீயாய் நெஞ்சம்
துக்கங்கள் துரத்துகையில்
கவிலில் கண்ணீர் எழுதும் - புது
கவிதையாய் தொடருகையானு என் யாத்திரை...

எத்தனையோ ஜென்மாந்தரங்களாய்
எத்தனை எரிந்தாலும் எண்ணை வற்றாத
சித்திர விளக்காய் திகழும் - என்
தாய் தமிழோடு தொடருகையானு என் யாத்திரை...

சொப்பணங்கள் ஆயிரம் கண்டு
சோர்ந்து போவதுமுண்டு-ஆனாலுமந்த
சொர்ண நிமிடங்கள் வந்தென் நெஞ்சில்
சந்தணம் சாற்றுமென தனியே
தொடருகிறேன் என் யாத்திரை.....

இளமை

இள‌மை


மெளனத்தை முன்னிறுத்தி
பின்னால் ஒளிந்து கொள்ளும்
ஐயங்கள்...

அரைகுறையாய்
முழுமையடைகிறது
வயதுக்குரிய சில
விளக்கங்கள்...

நொடிப்பொழுதுகளில்
கவனிக்கப்படாமல்
கடந்து போய்விடுகிறது
படிப்பினைகள் ...

இன்றும் நாளையும்
பகிர்ந்து கொள்ளும்‌
நம்பிக்கைகள்...

கேட்கப்படாத‌ கேள்விகளில்
மிக அரிதாகிவிடுகின்றது
இளமை...

Saturday 7 January 2012

துரியன் பழம்

3 – துரியன் பழம்....

ஆரம்பத்தில் இது என்ன துரியன் பழம் என வியந்ததுண்டு. சரி விஷயத்தைப் பார்ப்போம்.

உலகில் எண்ணற்ற வகையான பழங்கள் உள்ளன. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் விளையும் ஒரு பழத்திற்காக முன்பதிவு செய்து மாதக்கணக்கில் காத்திருப்பது வினோதமானது. அந்தப் பழம் துரியன் பழம்தான்!

ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பழ மரங்கள் "பர்லியார்' பகுதியில் காணப்படுகின்றன. "துரியோ ஜெபித்னஸ்' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட துரியன் மரங்கள் உலகில் சுமத்ரா, போர்னியோ, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.


சிறிய அளவிலான பலாப்பழத்தைப்போலத் தோற்றமளிக்கும் இப்பழங்களைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே அதிகபட்சமாக 7 சுளைகள் வரை காணப்படும். இந்தப் பழம் மரத்திலேயே பழுத்து கீழே விழும். பழம் பழுக்கும்போது அழுகிய முட்டையிலிருந்து வரும் துர்நாற்றத்தைப்போல அதன் மணம் இருக்கும். இதன் காரணமாகவே பெரும்பாலானோர் இப்பழத்தை விரும்புவதில்லை.


இப்பழத்திற்குள் இருக்கும் இண்டோல் என்ற ரசாயனப் பொருள் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் இப்பழத்தை உண்டால் உடல் சுகவீனம் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அத்துடன் இப்பழத்திற்கு "அப்ரோடைசிக்' குணமுள்ளதால் வீரியத்தன்மையை உருவாக்குவதாக கருதப்படுகிறது. இப்பழம் பழுத்த பின்னர் அதிக நாட்களுக்கு வைக்க முடியாது.

"புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பது பழமொழி. ஆனால் மலேசிய நாட்டு வனத்துறையினர் வித்தியாசமான ஆராய்ச்சி ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். துரியன் பழம் பழுக்கும் காலங்களில் இதன் மரத்திற்கடியில் புலிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதனால் இப்பழத்தை புலிகள் விரும்பி சாப்பிடுவதாக இருக்கலாம். அல்லது இப்பழத்தை சாப்பிடுவதற்காக இம்மரத்திற்கு வரும் பிற விலங்கினங்களை தங்களுக்கு இரையாக்கிக் கொள்வதற்காகவும் இம்மரங்களுக்கடியில் புலிகள் கூட்டம் இருக்கலாம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துரியன் பழங்களுக்குச் சீனாவில் அதிக கிராக்கி உள்ளது. அதேபோல, தமிழகத்தில் சென்னை பகுதிகளில் இப்பழத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது.

பெண்களின் "ஈஸ்ட்ரோஜென்' என்ற ஹார்மோன் சுரப்பியை இப்பழங்கள் ஊக்குவிப்பதால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக நம்பப்படுகிறது.

தாய்லாந்து நாட்டில் சந்தாபுரி என்ற இடத்தில் ஆண்டுதோறும் பழங்களுக்கான திருவிழா நடைபெறும். இதில் முக்கிய பழமாக துரியன் இடம் பெறும். சந்தாபுரியே துரியன் பழங்களின் தலைநகராக கருதப்படுகிறது.
மிதவெப்ப மண்டல பயிரான துரியன் பழங்கள் மட்டுமின்றி அந்த மரமும் மருத்துவக் குணம் வாய்ந்ததாகும். இதன் இலைகளின் சாறு காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அதேபோல, மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இம்மரத்தின் இலைகளை வெந்நீரில் போட்டுக் குளிக்கலாம்.


இதன் இலைச்சாறு தோல் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இம்மரத்தின் பசுமையான இளம் தளிர்கள் மற்றும் தண்டுகள் சாலட் செய்வதற்கும் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழத்திலுள்ள கொட்டைகளைப் பலாக்கொட்டைகளைப் போல வேக வைத்தும், வறுத்தும் சாப்பிடுகின்றனர்.


நீலகிரி மாவட்டத்தில் துரியன் பழ மரங்கள் பர்லியார் மற்றும் கல்லார் பழப்பண்ணைகளில் மட்டும் காணப்படுகிறது. இங்கு குறைந்த எண்ணிக்கையிலேயே துரியன் பழ மரங்கள் இருப்பதால் இப்பழங்களுக்காக முன்பதிவு செய்து கொள்கின்றனர். இம்மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தமிழக அரசின் தோட்டக்கலைத்துறையும் பதியன் மற்றும் ஒட்டு முறைகளின் மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்து வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் துரியன் பழங்களைவிட நீலகிரி மாவட்டத்தில் விளையும் துரியன் பழங்கள் வீரியம் கொண்டவையாக இருப்பதால் இதற்கான கிராக்கியும் அதிகரித்துள்ளது. வழக்கமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துரியன் பழங்கள் ஒரு பழத்திற்கு ரூ.800 வரை விலை போகின்றன.


ஆனால் பர்லியார் பகுதியில் கிடைக்கும் பழங்கள் ஒரு பழத்திற்கு ரூ.2,000 வரை விற்பனையாகின்றன. இதுவே இப்பழத்திற்கு மக்கள் மத்தியிலுள்ள வரவேற்பை உணர்த்துவதற்கு சாட்சி! பல்வேறு மருத்துவக் குணங்களையும், உள்ளூர் வெளியூர் வெளிநாட்டு மக்களிடம் அமோக வரவேற்பையும் பெற்றுள்ள துரியன் பழத்திற்கு, சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தத் துரியன் பழம் மலைகளின் அரசியான நீலகிரியிலும் விளைவது இம்மாவட்டத்திற்கு மேலும் பெருமையளிப்பதாகும்.

கடைசியாக ஒரு தகவல். இப்பழங்களிலிருந்து வெளியாகும் மணம் ஒவ்வாததால், சிங்கப்பூரில் இப்பழங்களை பொது இடங்களில் உண்பதற்குத் தடை விதித்துள்ளனர். இந்த நாத்ததிற்காகவே இதை பஸ்,ரயில்களில் எடுத்துப்போக சிங்கையில் தடை.

இதன் மேல் தோல் நமது பலா பழம் போல் முள்ளு முள்ளாக இருக்கும். ஆனால் அளவில் சிறியதாக இருக்கும்.பழத்தின் கீழ் முனையில் சிறியதாக பிளந்தால் முழு பழத்தையும் திறந்துவிடலாம்.அதை திறப்பவர்கள் கெட்டி கையுறை போட்டுக்கொள்வது நலம்.ஏனென்றால் அதன் முற்கள் மிகவும் கூர்மையாக இருக்கும்.

இந்த பழங்கள் இரவில் மட்டும் தான் மரத்தில் இருந்து விழும் என்று.பகலில் விழுந்து யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இயற்கையின் வரம்?

கொஞ்சம் அபரிதமான சர்க்கரை ருசியுடன் சுவையாக இருக்கும் இது சாப்பிடும் இரண்டாவது சுளையிலேயே இதன் ஈர்ப்பு விசை புரிந்துவிடும்.


ஆகஸ்டு மாதம் இந்த பழத்தை அறுவடை செய்வர். ஆண்மை குறைவு போக்கும் அற்புத சக்தி இதற்கு உண்டு. அதனால் இதன் விலையும் அதிகம்தான். மஞ்சள் காமாலை நோயையும் குணப்படுத்தும் சக்தி உடையது. சாக்லேட், கேக், ஐஸ்கிரீம், பானங்கள் போன்றவை தயாரிப்பிலும் துரியன் பழம் பயன்படுகிறது.

பின் குறிப்பு:
இது நிறைய சாப்பிட்டால் சிலருக்கு உடம்பு சூடு அதிகமாகிவிடும்.
தொண்டை கமறும்.
அடுத்த 2 நாட்களுக்கு கொஞ்சம் தூர நின்று பேச வேண்டியிருக்கும்.
சுளையை சாப்பிட்ட பிறகு அது இருந்த ஓட்டில் தண்ணீர் ஊற்றிக்குடித்தால் உஷ்ணம் மற்றும் வாய் நாற்றம் இருக்காது.