Tuesday 29 November 2011

கண்ணதாசன் ஒரு சகாப்த்தம்

நான் பேச நினைப்பதெல்லாம்..
வெள்ளித்திரையில் விளைந்த நன்மைகள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னால் சொற்சித்திரங்கள் பூத்துவந்த பூஞ்சோலை என்று வர்ணிக்காமல் இருக்க முடியுமா? மனித உறவுகளுக்கு அடிப்படை அன்பு என்பதும் ஆணிவேர் போன்றதுதான். ‘நான்’ ‘நீ’ என்று சொல்லும்போது உதடுகள்கூப் பிரிந்துகிடக்கின்றன.. ‘நாம்’ என்று சொல்லும்போதே உதடுகள் இணைந்திருக்கின்றன என்கிற உவமைகளை அள்ளி வழங்கியவர் கலைஞர் அவர்கள்.

அத்தகு அன்பில் முகிழ்க்கும் உறவுகளில் கணவன் - மனைவி என்கிற அதியற்புத உறவைப் பற்றி ஒரு ஆராய்ச்சியா இப்பாடல்? இசையால் நம்மை என்றைக்கும் வசப்படுத்தும் இரட்டையர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி வார்த்தளித்த அரும்புதையல் - டி.எம்.செளந்திரராஜன் - பி.சுசீலா குரல்களில் இழைந்தோடி பாலும் பழமுமாய் பவனி வருகிற பாடல்!!

அன்பு நெஞ்சங்களே.. மறக்க முடியாத இந்தப் பாடல்.. திரையில் எத்தகு சூழலில் வருகிறது என்பதைச் சற்றே நினைவூட்டுவது அவசியம் என்பதால்.. இதோ..

நாயகன் - நாயகியாய் சிவாஜிகணேசன் - சரோஜாதேவி - மருத்துவ விஞ்ஞானியான நாயகனுக்கு உதவிக்கரமாய் செயலாற்றி.. அவன் உள்ளத்திலும் இடம்பெற்று இல்லத்தரசியாகிறாள் நாயகி. கணவன்-மனைவி என்கிற பந்தம் ஏற்று சில நாட்களுக்குப் பிறகு தேனிலவுக்குப் பயணிக்கிறார்கள். அழகியதோர் புல்வெளியில் அமர்ந்திருக்கிறான் நாயகன்.. அடைக்கலமானதுபோல் அவன் மடியில் தலைசாய்த்திருக்கிறாள் அழகுமயில் நாயகி!

நாயகன் ஒரு வினா தொடுக்கிறான்! நானும் பார்க்கிறேன்.. நான் எழுவதற்குள் எழுந்து விடுகிறாய்.. எனக்கு வேண்டியது அனைத்தும் செய்கிறாய்.. நான் உறங்கிய பின்னரே துயில்கிறாய்.. உனக்கென இதுவரை எதுவுமே நீ கேட்கவில்லையே.. இப்போது உனது உதட்டிலிருந்து வரும் முதல் வார்த்தை .. ஏதாவது நீ கேட்க வேண்டும். அதை நான் கொடுக்க வேண்டும்.. பின்புதான் மற்ற பணி என்று முடிக்கிறான். நாயகி இதழ் திறக்கிறாள்.. பாடலின் பின்னணி இசைத் தென்றலாய் முன்செல்கிறது.

நான் பேச நினைப்பதெல்லாம்.. நீ பேச வேண்டும் என்கிறாள்..

சூழலுக்காக மட்டுமல்ல.. திரைக்கதைக்காகவும் முழுமையாகப் பொருந்தியது என்பதையும் தாண்டி.. மனிதகுலத்தில் மானுட இனத்தில் .. திருமண பந்தம் ஏற்கும் ஒவ்வொரு தம்பதிக்களுக்குமான இல்லற ரகசியம் இதில்தான் இருக்கிறது. இந்த அர்த்தப்புதையலை கண்டெடுத்துத் தந்தார் எங்கள் கண்ணதாசன் கலை இலக்கிய மையத்தலைவி முனைவர் பேராசிரியர் சரசுவதி ராமனாதன் அவர்கள்.

இந்துக்களின் திருமணச்சடங்குகளின்போது மங்கல நாணேற்றும் தருணம்.. சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லப்படுவது வழக்கம்! மாங்கல்யம் தந்துநா மககேதனா என்று துவங்கும் அந்த ஸ்லோகம் என்ன சொல்கிறது தெரியுமா? இன்று முதல் இவனது கண்வழியே இந்த உலகைப் பார். இருவரும் எப்டி இணைந்து வாழ வேண்டும் என்று வேதங்களின் சாரமாய் விளைந்த இந்த மந்திரத்தின் அர்த்தங்களை அப்படியே உள்வாங்கி 16 வரிகளுக்குள் வரைந்து வழங்கியுள்ளார் கண்ணதாசன். இப்போது மீண்டும் ஒரு முறை இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)

படம்: பாலும் பழமும்
இசை: MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

No comments:

Post a Comment