Tuesday 22 November 2011

நிலவை பார்த்து வானம் சொன்னது

பார்த்து வானம் சொன்னது..
கவிஞர்களின் பாடுபொருள் நிலா என்பதில் புதுமையில்லை. ஆனால், ஒவ்வொரு கவிஞனும் புதிய புதிய யுக்திகளைக் கையாளத் தனது கற்பனைச் சிறகை விரிக்கிறான். கவிஞரின் கைவண்ணம் இங்கே தலைமை தாங்குகிறது. நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே! என்கிற பல்லவியை அடுத்து வருகிற வரியில் புராணத்தை பொருத்தமாய்க் கையாண்டுள்ளார்! திருநீலகண்டரின் மனைவி சொன்னது.. நீயொன்றும் புதிதாய் சொல்லிவிடவில்லை.. ஏற்கனவே திருநீலகண்டரின் மனைவி சொன்னதைத்தான் நீயும் சொல்லியுள்ளாய்! ஆணும் பெண்ணும் அனுசரித்துப் போவதுதானே இல்வாழ்க்கை! கருத்து வேறுபாடுகள் முற்றிடும்போது.. அனேகமாக.. இந்த வாசகம் சொல்லாத பெண்மை இன்னும் பிரம்மன் படைக்கவில்லை எனச் சொல்லலாம். அனுபவ முத்திரைகள் அள்ளித்தரும் கவி வள்ளலுக்கு இந்தப் பாடல் சர்க்கரைப் பொங்கல்தானே1

காலகாலமாக தீண்டாமைக் கொடுமை இந்த மண்ணில் நடந்துவருவது கண்டு வெஞ்சினம் கொண்ட வெண்தாடிவேந்தர் ஐயா பெரியார் ஆற்றிய சமுதாய சீர்திருத்தப்பணியால் தமிழ்நாடு நாகரீகமாய் நடைபோடுகிறது எனில் அது மிகையில்லை. ஆண்டுகள் பலவாக.. தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் மேடைபோட்டுச் சொல்லிவந்த பகுத்தறிவுக் கருத்துக்கள் தமிழர்களின் தன்மான வாழ்விற்கு விடிவெள்ளியாய் வந்தது என்பதை மறுப்பாரில்லை. இந்தப் பட்டறையில் கண்ணதாசனும் இருந்தவர் என்பதாலோ என்னவோ.. இதோ இந்தப் பாடல் வரிகளில் பளிச்சிடும் கருத்துக்கள் பாராட்டைப் பெறுகின்றன. திரைப்படத்தில் வருகின்ற கதாபாத்திரங்களின் வாயிலாக பாடல் என்னும் உத்தியில் பகுத்தறிவுக் கருத்தை உணர்த்த முடியும் என்று தெளிவாக்கியிருக்கிறார் என்பதை விட காலம் கண்ணதாசனுக்கு கை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா?
தர்மம் காத்த கை அது சமதர்மம் கண்டதா?
ஆலயம் சென்றேன் அங்கே அனுமதியில்லை.. நீ
அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை..

இவ்வரிகளில்தான் நான் அசந்து போயிருக்கிறேன் அதுநாள் வரை.. இன்னும் இப்பாடல் பற்றி .. இதில் உள்ள வரிகளின் ஆழத்தைப் பற்றி.. அர்த்தத்தை எடுத்துரைக்க வந்தார் என் இனிய நண்பர் என்பதைவிட நான் வணங்கும் நல்லவர்.. நாலும் தெரிந்தவர்... திரு.சுந்தரவரதன் அவர்கள்! கண்ணதாசனை அணு அணுவாக ரசிப்பவர்.. மெல்லிசை மன்னருக்கு உள்ளத்தில் கோயில் கட்டி வழிபடுபவர்! ராம்கி என்னும் எந்தன் நண்பரின் இதயத்திலும் பரிபூரணமாய் இடம்பெற்றவர்!
அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது .. என்னிடம் அவர் கேட்ட கேள்வி இதுதான்..

தந்தை தன்னையே தாய் தொடாவிடில்..
நானுமில்லையே.. நீயுமில்லையே..

தாய் - தந்தை இல்லையென்றால் பிறப்புக்கு வழியெங்கே என்கிற கருத்து மட்டுமே எனக்குத் தெரிந்தது என்றேன். அவர் சுட்டிக்காட்டிய வரிகளில் ஏதும் புதிதாக பொருள் ஒன்றுமில்லை என்று நான் விளம்ப.. அவர்தந்த விளக்கம் கேட்டு வியந்துபோனேன்.

பொதுவாக.. கூடலின்பொருட்டு ஆடவனே பெரும்பாலும் 95% பெண்ணை நாடுவான். அழைப்பான்.. தொடுவான்.. தொடருவான். இது நம் மண்ணின் பாரம்பரியம். பாரதப் பண்பாடு. பெண் ஒருத்தி ஆடவனைக் கூடலுக்கு அழைப்பது அரிதிலும் அரிது. இப்படியிருக்க, கண்ணதாசன் ஏன் தந்தை தன்னையே தாய் தொடாவிடில்.. என்று எழுதி உள்ளார் என்கிற வினா விடை தேடியது. என்றோ ஒரு நாள் பெண்ணுக்கு அந்த ஆவல் எழும்ப .. அவள் துவங்கிடும் அந்தக் கூடலின் விளைவாய் பிள்ளை உருவானால், அது எல்லா வகைகளிலும் பலமுள்ளதாக, வீரியமுள்ளதாக, வளமுள்ளதாக அமையும் என்பது மெய்ஞானம் கண்டெடுத்த விஞ்ஞான உண்மை என்றார்.

ஒற்றைப் பாடலுக்குள் ஓராயிரம் பொருள் வைத்து - சற்றும்
கர்வமின்றி குழந்தைபோல் வாழ்ந்தவனே.. அந்த
வித்தைக் கற்றுக்கொள்ள திறந்த புத்தகம் நீயே!
வாசகன் போல் நானும் என்றும் உந்தன் வாசலிலே!!

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே

தாளத்தை ராகம் தொடாத போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தை தன்னையே தாய் தொடாவிடில்
நானும் இல்லையே நீயும் இல்லையே
நானும் இல்லையே நீயும் இல்லையே

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே

தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா?
தர்மம் காத்த கை அது சமதர்மம் கண்டதா?
ஆலயம் சென்றேன் அங்கே அனுமதியில்லை.. நீ
அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை..


சவாலே சமாளி திரைப்படத்திற்காக நடிகர் திலகத்துடன் கலைச்செல்வி ஜெ.ஜெயலலிதா.. மெல்லிசை மன்னர் இயக்குனர் பி.மாதவன் ஆகியோரின் கூட்டணியில் விளைந்த வெற்றிப்படம்!

No comments:

Post a Comment