Tuesday 22 November 2011

கண்ணதாசன் ஒரு சகாப்த்தம்

விழியே கதை எழுது.. கண்ணீரில் எழுதாதே!
கண்கள் என்பன காண்பதற்கு மட்டுமல்ல.. கண்ணீரைச் சிந்தவும்தான்! கண்களில் துவங்குமிந்த காதலில்.. கண்ணீர் உடன்பிறப்பாகிறது! ஏற்கனவே ஒரு சோகமான சூழ்நிலையில் கண்ணீரைப்பற்றி நான் எழுதிய வரிகள் இங்கே குறிப்பிடுவது பொருத்தம் என்று கருதுகிறேன்.
பூமியெனும் பரப்பைச் சுற்றி மூன்றுமடங்கு கடல்நீரால் சூழப்பட்டிருப்பது போதாமல்.. மேகங்களில் நீர் அள்ளிச் செல்வதும் போதாமல், நதி, குளம், ஏரி என நீர்ப்பரப்புகள் பலவும் போதாமல்.. படைத்துவிட்டான் கண்களிலும் கண்ணீரை!
விழிகள் தாங்கள் செய்த பாவத்திற்கு தண்டணை சுமக்கின்றன என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்!
அழுதுவிடுங்கள்.. சோகமிருக்கிறதோ.. இல்லையோ மனது லகுவாகிவிடும் என்கிறார் கவியரசர்.
நமக்காக அழுவதைவிட பிறருக்காக நாம் அழும்போதுதான் நம் கண்கள் நாகரீகம் பெறுகின்றன என்பதும் உண்டு.
வேதனையில் பிறக்கும் இந்த வெப்பநதி.. கண்ணிமைகளைத் தழுவி கன்னங்களைத் தாண்டும் கோலம்!
எண்ணங்கள் இதயத்துள் மூழ்கி.. மூழ்கி.. வெளிக்கொணரும் இந்தக் கண்ணீர் ஏழைகள் வாழ்வில் ஏராளமாய் இடம்பெறுவதும்..
காதலின் முடிவு பிரிவென்று வருகிறபோது.. இன்னும் கொஞ்சம் தாரளாளமாய் இதயம் பிழியப்படுகிறது.
உரிமைக்குரல் என்னும் திரைப்படத்தில் ஒரு உன்னத பாடல்! மெல்லிசை மன்னர் அவர்கள் அமைத்த இசையில்.. இனிமேல் அவரால் கூட இப்படியொரு மென்மையான இசையமைப்பைத் தரமுடியாது என்கிற அளவு நண்பர்களிடம் நான் சத்தியம் செய்ததுண்டு. கே.ஜே.யேசுதாஸ் - பி.சுசீலா குரல்களில் இதயம் பிரிய விரும்பாத பாடல்களில் ஒன்றாக.. வெற்றிப்பட இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில்..
விழியே கதையெழுது.. கண்ணீரில் எழுதாதே..
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி.. உனக்காகவே வாழ்கிறேன்!
கவிஞர் வாலி அவர்களே முழுக்க முழுக்க எழுதிய உரிமைக்குரல் திரைப்படத்தில் இந்தப் பாடல்மட்டும் அவர் எழுதவில்லை. மேற்கண்ட பாடல் அமைக்கப்பட்டச் சூழலும் பாடல் இணைக்கப்பட்ட விதமும் சுவராஸ்யானமவை. படம் முழுவதும் எடுத்தாகிவிட்டது. கதாநாயகனாய் பாத்திரம் ஏற்ற மக்கள் திலகம்.. இயக்குனர் ஸ்ரீதரிடம் கேட்கிறார். இன்னும் ஏதாவது காட்சிகள் எடுக்கப்பட வேண்டியது உள்ளதா? இல்லை என்கிறார் ஸ்ரீதர். எம்.ஜி.ஆர் - இப்படத்தில் கனவுக்காட்சி ஏதும் இடம் பெறவில்லையே.. எனது ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன ஆவது என்கிறார். அதுவும் அந்தக் கனவுக்காட்சியில் எத்தனை விதமான உடைகள் என்றெல்லாம் கேள்வி எழுமே என்கிறார். அதற்கு இயக்குனரின் பதில்.. இது எம்.ஜி.ஆர் நடித்த படமாக இருக்கலாம்... ஆனால், இது ஸ்ரீதரின் படம். இதில் கனவுக்காட்சிகளுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.
அடுத்து நடந்தது என்ன தெரியுமா? மக்களின் ரசிப்புத் தன்மையை.. தனது ரசிகர்களின் நாடியை முற்றிலும் அறிந்து வைத்திருத்த மகத்தான மனிதரல்லவா எம்.ஜி.ஆர்.. அவரே வினியோகஸ்தர்களுக்கு தொடர்புகொண்டு தொலைபேசியில் படம் தயாராக உள்ள விவரத்தைத் தெரிவிக்கிறார். அவர்கள் வழக்கம்போல்.. எத்தனை சண்டைக் காட்சிகள்? எத்தனைக் கனவுக்காட்சிகள்? என்று தன்னிடம் எழுப்பப்பட்ட அத்தனை தொலைபேசிகளுக்கும் விடையை இயக்குனரிடம் பெற்றுக்கொள்ளுமாறு சொல்லிவிடுகிறார். அவ்வளவுதான்.. ஸ்ரீதர் அவர்களின் இல்லத்திற்கு அன்றுமுதல் அடுத்து இரண்டு மூன்று நாட்களுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் எல்லாம் இதைப்பற்றியே.. நிலையை உணர்ந்த ஸ்ரீதர் .. அவசர அவசரமாக.. எம்.ஜி.ஆரைத் தொடர்புகொண்டு ஒரு கனவுக்காட்சியை படமாக்கிவிடலாம் என்கிறது.. எம்.ஜி.ஆரும் இசைவு தெரிவிக்கிறார்.
அந்த அவசர கதியில்.. அமைக்கப்பட்ட காட்சியமைப்பு.. (வானத்திலிருந்து இறக்கைக் கட்டிக்கொண்டு இருவரும் பறக்கட்டும் என்று)வார்த்தைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வகையிலே காட்சியும் அமைக்கப்பட.. ஏற்கனவே எடுத்து வேறு ஒரு படத்தில் பயன்படுத்தப்படாமலிருந்த ஒரு பாடலை இந்தச்சூழலுக்குப் பொருந்தவே எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் கருத்து வேறுபாடு காரணமாக எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றைய காலக்கட்டத்தில்.. கண்ணதாசன் எழுதிய பாடல்கள் தன்னுடைய படத்தில் இடம்பெறுவதைத் தவிர்த்துவந்தார். எனினும் கிடைத்த இந்தப்பாடல் எழுதப்பட்டது கண்ணதாசனால்! இந்தச் செய்தியைத் தெரிவிக்காமல்.. எம்.ஜி.ஆர் அவர்களிடம் பாடல் காண்பிக்கப்பட்டது. பாடலைப் படித்தவுடன் கண்ணதானின் வரிகள் என்பதைக் எம்.ஜி.ஆர். கண்டுபிடித்துவிடுகிறார். என்னதான் இருந்தாலும் கண்ணதாசன் தமிழைக் காதலித்தவரல்லவா?
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது - இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)
கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா

No comments:

Post a Comment