Friday 14 September 2012

நான் எனக்குள்ளே...

நிரந்தரமா
ஒரு வேலை இல்லாம போனதால
நிம்மதியும் சேத்து 
தொலைச்சிபுட்டு தவிச்சேன்...

தொழிற்கல்வி படிக்காமா
தெருத்தெருவா அலைஞ்சேன்

நான்படிச்ச படிப்புக்கு
நல்ல வேலைகெடைக்காதானு
நாளுக்கு நா திரிஞ்சேன்...

ஒடம் பொறந்த அத்தனபேரும்
ஒதுக்கி வக்கையிலே
கடசிமொவன் – என்
நெலம பாத்து
நித்தம்நித்தம்
நீவடிப்பா
என்னபெத்த மவராசி...

நான்
எடுத்தெரிஞ்சு பேசயில
துடிச்சி போவா
தொந்தரவு செஞ்சாலும்
பொருத்துப்போவா

சொந்தகார ஆசாமி
துபாயிலேந்து வந்தாவ
வந்தவுக கையபுடிச்சி
கெஞ்சாத கொறையா

கேட்டதாலே
விசா எடுத்து
அனுப்புறேனு சொன்னாக
கொறஞ்ச பணம் முன்கூறு
கட்டச்சொல்லி போனாவ...

ஆடுவித்து
கோழிவித்து
அடிவயித்த காயப்போட்டு
அப்பனுக்குத்தெரியாம
பேங்குல போட்டப்பனம்
போதாம போனதால
அஞ்சு வட்டிக்கு வாங்கி
விசா எடுக்கச்சொல்லிபுட்டா...

விசாவந்து சேரனுமுன்னு
வேண்டாத சாமியில்ல
கும்புடாத கோயில்ல...

ஆத்தா
வேண்டுதலும் பலிச்சிடுச்சு
விசாவும் வந்திடுச்சி
விடிவுகாலம் பொறந்திடுச்சி

சீமைக்குப்போரான் –என்
சின்னராசா
செவனாண்டி வீரப்பேச்சு
செல்லப்பன் டீ கடயில..

கருத்தாயி பட்டகஷ்ட்டம்
கைமேல பலன்கெடைக்க
துபாயிக்கு
வந்து சேந்துபுட்டான்
கருத்தாயி பெத்தமொவன்

வெவரம் ஏதும் தெரியாம
விருமாண்டியா திரிஞ்சபுள்ள
பெத்தவுக பட்டகஷ்ட்டம்
தெரியாம வளந்தபுள்ள
துபாயிவந்து சேந்துபுட்டு
கண்கலங்கி நின்னானே
கருத்தாயி பெத்தமொவன்...

கண்ணுக்குள்ள
உசிராவச்ச – என்ன
பெத்த ஆத்தாகிட்ட – போனுல
பேசும்போது
ஒலகமே மறந்துடுவேன்
ஒசர பறந்துடுவேன்...

அசலும் வட்டியும்
அடைஞ்சதுமே
மூனு வருஷம் கழிஞ்சுபோச்சு...

பெத்தமக்கா மொகத்த பாக்க
போவனுமுனு நெனச்சப்போ
ஊடுகட்ட வேனுமுனு
செவனாண்டி போட்ட
லெட்டர படிச்சுபுட்டு
முடிவ நானும்
மாத்திப்புட்டு
ஊருக்கு போறத
ஒதுக்கி வச்சேன்

பட்டகஷ்ட்டம் படுவோன்னு
பார்டைமா கார் கழுவ
துணிஞ்சேன் – கண்ணுல
தூக்கம் காணாம போச்சு...

ஊரெல்லாம் மெச்சும்படி
மச்சிஊடு கட்டி முடிச்சேன்
ஓரமா ஒதுங்குனவுக
அத்தையும் மாமனும்
மொறகொண்டாடி வந்தாவ...

பழசயெல்லாம் மறந்துபுட்டு
பாக்குமாத்த நெனச்சாவ
பொறந்த பாசம் விடாம – என்ன
பெத்தவளும் ஒப்புகிட்டா

அங்கே
பத்திரிக்க அடிச்சு
பந்தகாலும் நாட்டாச்சு
இங்கே
பார்சலெல்லாம் கட்டிமுடிச்சு
ரெண்டுநாளு மிச்சமிருக்க

விதி வந்து தொட்டுபுட்டு...

கட்டட வேலயில
ஸ்கபோல்டிங் அவுக்கையில
கை தவற...
...................
கருத்தாயி பெத்தமொவன்
கைலாயம் போயிபுட்டான்...

ஆறுவருசம் கழிச்சி
ஆசமொவன் வருவானு
கணா கண்டா கருத்தாயி

செண்டெல்லாம் அடிச்சி
சின்னராசாவருவான்னு
செவனாண்டி காத்திருக்க

அம்புட்டு பேத்தையும்
ஆசமொவன் ஏமாத்தி
வந்தானே
ஆறடி பொட்டியில...

பெத்தமொவன் மொகத்த
பாக்கமுடியாம
மாரடிச்சி அழுதாளே...

மாடத்த கட்டிவச்சி
மயில புடிச்சிவச்சேன்
மாடமும் மயிலும் இருப்பதென்ன
என் மொவராசன் போனதென்ன

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

No comments:

Post a Comment